அரசு குடியிருப்பு பகுதியில் கட்டிடத்தின் மேல் சுவர் இடிந்து விழுந்து விபத்து....!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே உள்ள அரசு குடியிருப்பு பகுதியில் கட்டிடத்தின் மேல் சுவர் இடிந்து விழுந்து விபத்து....!

அரசு குடியிருப்பு பகுதியில் கட்டிடத்தின் மேல் சுவர் இடிந்து விழுந்து விபத்து....!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் அருகே அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இது 2002ம் ஆண்டு கட்டப்பட்ட வாடகை கட்டிடம். மேலும் இது, அப்போது பணிபுரிந்த அரசு அலுவலர்கள் தங்குவதற்காக  கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். தற்போது 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கட்டிடங்களில் வசித்து வருகின்றனர். 

கடந்த 20 ஆண்டுகளாக வீட்டு வசதி வாரியத்தின் மூலம் எந்தவித பராமரிப்பும் இன்றி கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு, மழைநீர்  உள்ளே புகுந்து மிகுந்த சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின்  காரணமாக கட்டிட விரிசலில் தண்ணீர் புகுந்து, சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு பெயர்ந்து விழுந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று மாலை சி பிளாக் பகுதியில் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தின் சன் சைடு உடைந்து பலமான சத்தத்துடன் கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த பகுதியில் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக குடியிருப்பு வாசிகள், தகவல் அளித்ததின் பேரில் அரசு அலுவலர்கள், குடியிருப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து  சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 20 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இது போன்ற விபத்துக்கள் நான்காவது முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இந்த பகுதியில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு  ஆய்வு செய்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். இந்தப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.