தமிழக மீனவர்கள் கைது: சிங்களப் படையினருக்கு எதிராக அன்புமணி கண்டனம் !

தமிழக மீனவர்கள் கைது: சிங்களப் படையினருக்கு எதிராக அன்புமணி கண்டனம் !

தமிழக மீனவர்கள் 9 பேர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

நேற்றைய தினம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து  மீன் பிடிப்பதற்கான மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று 558 விசைப்படகுகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். திடீரென இன்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக 9 மீன்வர்களுடன் நெடுந்தீவு கடற்கரையில் படகு கரை ஒதுங்கியுள்ளது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : நெடுந்தீவில் சிக்கிய தமிழ் நாட்டு மீனவர்கள்!

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 9 பேர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் 2 மாத மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த 16-ஆம் நாள் தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். முதல் முறை மீன்பிடிக்கச் சென்ற போதே தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அதிலும் எந்தத் தவறும் செய்யாமல், படகு பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்தது மனித நேயமற்ற செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. சிங்களப் படையினரின்  இந்த தொடர் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.