"உதயநிதி ஸ்டாலினை சுற்றியே தமிழ்நாடு அரசு சுழல்கிறது" அண்ணாமலை!

தமிழ்நாட்டில் விவசாயிகளைக் கவனத்தில் கொள்ளாமல் மதுபானக் கடைகளை மட்டும் அதிகளவில் திமுக திறந்து வருவதாக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் அண்ணாமலை என் மண் என் மக்கள் 3-ம் கட்ட நடைபயணத்தை தொடங்கினாா். அப்போது அவருக்கு திரளான கட்சி நிா்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனா். 

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, திமுக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் தொடா்ந்து மதுபானக்கடைகளை அதிகளவில் திறந்து வருவதாகவும், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என திமுக எண்ணுவதாகவும் குற்றம் சாட்டினாா்.

ஆங்கிலேயா்களே சனாதனத்தை ஒழிக்க முடியாத நிலையில் திமுகவினரால் எவ்வாறு சனாதனத்தை ஒழிக்க முடியும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை பட்டத்து இளவரசர் போல உதயநிதி ஸ்டாலினை சுற்றியே தமிழ்நாடு அரசு சுழல்வதாகவும் விமா்சித்தாா்.  

தொடா்ந்து பேசிய அவா், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் யாா் மீதும் ஊழல் புகார் எழுந்ததில்லை என்றாா். 

நாட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீா் மற்றும் கேஸ் இணைப்பு வழங்க வேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய நோக்கம் என கூறிய அண்ணாமலை, திமுகவில் எம்பி கனிமொழியை தவிர பிற பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் வழங்கப்படுவதில்லை என கூறினாா்.