பள்ளியின் குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம் கலக்கப்பட்ட அவலம்..!

பள்ளியின் குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம் கலக்கப்பட்ட அவலம்..!

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி, குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைத்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் அருகே சின்ன மூப்பன்பட்டி கிராமத்தில்,   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். 

இப்பள்ளியின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையலர் முத்துச்செல்வி என்பவர் நேற்று மாலை பாத்திரம் கழுவுவதற்காக  பள்ளியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை  திறந்துள்ளார். அப்போது தண்ணீர் கலங்கலாக வந்துள்ளது.

இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். உடனே, அவர் போலீசார் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 

பின்னர், அதிகாரிகள் விசாரணை நடத்தியதில்  மர்மநபர்கள் யாரோ மாட்டுச்சாணத்தை தொட்டியில் கலந்திருப்பது  தெரிய வந்தது. இதனையடுத்து அங்கிருந்து அந்த குடிநீர் தொட்டி அகற்றப்பட்டது. 

மற்றுமொரு புதிய சிமெண்ட் தொட்டி கட்டி அதை பாதுகாப்பாக மூடி வைக்க முடிவு செய்யப்பட்டு  தற்போது அங்கு புதிய சிமிண்ட் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணத்தை கலந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் என்னும் கிராமத்தில் இதேபோல பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் தொட்டியில் மனித மலத்தை கலந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

அந்த பாதிப்பே இன்னும் ஓயாத நிலையில், தற்போது மீண்டும் அதேபோல ஒரு  சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க   | "பிரச்சனைகளை திசை திருப்பவே ஒரே நாடு, ஒரே தேர்தல்" கே.பாலகிருஷ்ணன் தகவல்!