தமிழகம் முழுவதும் பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...

தமிழகம் முழுவதும் பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...

தீபாவளி பண்டிகை நேரத்தில் கட்டாயமாக நடைபெறும் வசூல் வேட்டையை தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் சார்பதிவாளர், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள் என பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 

அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 11 ஆயிரத்து 850 ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல்  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 47 ஆயிரத்து 950 ரூபாயை  பறிமுதல் செய்த அதிகாரிகள் யாரையும் கைது செய்யாமல் அங்கிருந்து சென்றனர்.  

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் என்பவருடைய காரில் கணக்கில் வராத 1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 23 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது. மேலும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை  வசூல் செய்ததற்கான ஆதாரம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 51 ஆயிரத்தை பறிமுதல் செய்த நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.  

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 26 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் பிராட்டியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டர். அப்போது கணக்கில் வராத 60 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 50 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.