ரூ.40 கோடி மதிப்புள்ள பழமையான சிலைகள் மீட்பு.!

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த தொன்மையான 8 சிலைகள் உட்பட 12 சிலைகள் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

ரூ.40 கோடி மதிப்புள்ள பழமையான சிலைகள் மீட்பு.!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள Ideal Beach Resort என்ற இடத்தில் தொன்மையான பார்வதி சிலையை பதுக்கி வைத்து வெளிநாட்டிற்கு கடத்தவிருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவ்விடத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் தேடி வந்த தொன்மையான பார்வதி சிலைக்கு பதிலாக தனி அறையில் பெட்டிகளுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த 11 பழமையான உலோக சிலைகள் இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து 11 சிலைகளை மீட்ட அதிகாரிகள் சிலைகளை பதுக்கி வைத்திருந்த காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஜாவித் ஷா என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் இந்திய தொல்லியல்துறை அதிகாரகளிடம் அனுப்பி சோதனை மேற்கொண்டதில் 8 சிலைகள் மிகவும் தொன்மையானவை என்பது சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

எனினும் பதுக்கி வைத்து வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த பார்வதி சிலை கிடைக்காததால் ஜாவித் ஷாவிடம் நாசூக்காக பேச்சு கொடுத்த அதிகாரிகள் தாங்கள் தேடி வந்தது பார்வதி சிலைக்காக மட்டுமே எனவும், அதை ஒப்படைத்துவிட்டால் பிடிபட்ட மற்ற சிலைகளை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தனர்.

இதனை நம்பிய ஜாவித் ஷா தான் மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தொன்மையான பார்வதி சிலையை அதிகாரிகளிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து ஜாவித் ஷா-வை கைது செய்த அதிகாரிகள் மீட்கப்பட்ட 12 சிலைகள் தொடர்பாக ஜாவித் ஷா-விடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் தனது சகோதரர் ரியாஸ் தொன்மையான சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்கும் தொழில் செய்து வருவதாகவும், கடந்த சில வருடங்களாக தானும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் ஜாவித் ஷா வாக்குமூலம் அளித்தார். மேலும், ஜாவித் ஷா தஞ்சாவூரில் உள்ள சங்கம் ஹோட்டலினுள் கடை வைத்து இதுபோன்ற சிலைகளை வைத்து வியாபாரம் செய்து வந்ததும், பின் கொரோனா முதல் அலையின் காரணமாக அங்குள்ள கடையை மூடிவிட்டு இங்கு வந்து வியாபாரத்தை துவங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி, கூறுகையில் மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 30 முதல் 40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், சிலைகளை பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் மற்றொரு குற்றவாளியான காஷ்மீரைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மீட்கப்பட்ட தொன்மையான பார்வதி சிலை உட்பட 8 சிலைகளுள் பல சிலைகள் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரியவந்துள்ளதாகவும், மீட்கப்பட்ட சிலைகள் அனைத்து எந்தெந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டது என்பது தொடர்பாக புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் மீட்கப்பட்ட சிலைகளுள் மிக அரியதான 10 தலை ராவணன் சிலை கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவில் மகாராஷ்டிரா உட்பட 5 இடங்களில்தான் ராவணனுக்கு கோவில் உள்ளது எனவும், அக்கோயிகளில் இருந்து ராவணன் சிலை திருடப்பட்டுள்ளதா? அல்லது ஸ்ரீலங்காவில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்ற கோணங்களில் அதிகாரிகள் விசாரணையைத் துவங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.