உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - ஓ.பி.எஸ் தகவல்!

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - ஓ.பி.எஸ் தகவல்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் இருவர் அமர்வு வழங்கிய தீர்ப்பை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இருவர் அமர்வு வழங்கிய தீர்ப்பு:

வானகரத்தில் கடந்த ஜுலை 11ம் தேதி ஓ.பி.எஸ். பங்கேற்பின்றி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு செயற்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை ஓ.பி.எஸ் தரப்பு வரவேற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில் இருவர் அமர்வு முன் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என கூறியதோடு, தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்:

இந்தநிலையில், தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், இருவர் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இருந்து திண்டுக்கல் திருச்சி சாலை மார்க்கமாக காரில் சென்னை புறப்பட்டு சென்றார்.

இதையும் படிக்க: மீண்டும் மீண்டும் ரிப்பீட்...ஐகோர்ட் தீர்ப்பால்...பறிபோன ஜெயலலிதாவின் பதவி...!

தேர்தல் ஆணையம் சொல்வது தான் இறுதி முடிவு:

முன்னதாக தீர்ப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை செல்வராஜ், உயர் நீதிமன்றம் மாறி மாறி தீர்ப்பு வழங்கி வருவதாகவும், ஓ.பி.எஸ் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக மதிப்பவர் என்றும் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் சொல்வது மட்டுமே இறுதி தீர்ப்பு என்றும் அவர் கூறினார்.