மருத்துவ சிகிச்சைக்கு லீவ் தராததால் விரக்தி..? ஆயுதப்படை காவலர் தூக்குபோட்டு தற்கொலை...

வீட்டில் தூக்கிட்டு இரண்டாம் நிலை காவலர் தற்கொலை. மருத்துவ சிகிச்சைக்கு விடுமுறை தராததால் தற்கொலையா? என போலீசார் விசாரணை.

மருத்துவ சிகிச்சைக்கு லீவ் தராததால் விரக்தி..? ஆயுதப்படை காவலர் தூக்குபோட்டு தற்கொலை...

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிஷ்பாஷா. இவர் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். கீழ்பாக்கம் குட்டியப்பன் தெரு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் சக காவலர்களுடன் கடந்த 2 வருடங்களாக  ஒன்றாக வசித்து வந்தார். கடந்த வருடம் சாதிக் பாஷாவிற்கு சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியிட மாறுதல் வழங்கியும் செல்லவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சாதிக் பாஷாவிற்கு கடந்த சில நாட்களாக  உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதே போல் சாதிஷ்பாஷா காவலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக சக காவலர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சக காவலர்கள் பணியை முடித்து வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பூட்டை உடைத்து கதவை திறந்த போது சாதிஷ் பாஷா அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தலைமை செயலக காலனி போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்துபோன சாதிக்  அறையில் இரண்டு கடிதங்கள் சிக்கியது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும் மற்றொரு கடிதத்தில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற மருத்துவ விடுமுறை கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என காவல்துறை உயரதிகாரிக்கு சாதிக் பாஷா எழுதி இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் விடுமுறை தராமல் இழுத்தடித்ததால் காவலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என துறை ரீதியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.