அன்புமணி ராமதாஸ் கைது; கண்ணாடிகளை உடைத்த பாமகவினர்...கலவரத்தில் முடிந்த போராட்டம்!

அன்புமணி ராமதாஸ் கைது; கண்ணாடிகளை உடைத்த பாமகவினர்...கலவரத்தில் முடிந்த போராட்டம்!

கடலூரில் என்.எல்.சி நிறுவன விரிவாக்கப் பணிகளை எதிர்த்து பாமகவினர் போராடியதையடுத்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பாமகவினர் காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நிறுவனம் 2-ம் சுரங்கப்பாதை விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், பாமகவினர் 2-வது முறையாக என்.எல்.சி நிர்வாகத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவல்துறையை ஏவி  என்.எல்.சி நிர்வாகம் நிலத்தைக் கையகப்படுத்துவதாக கடுமையாக சாடினார். 

தமிழ்நாட்டின் மண்ணையும் மக்களையும் என்.எல்.சி நிர்வாகம் அழித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விட பல மடங்கு ஆபத்தானது நெய்வேலி நிலக்கரி சுரங்கம் என்று குற்றஞ்சாட்டினார்.  தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியான 36 ஆயிரம் மெகா வாட்டில் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே தேவை என்று தெரிவித்த அன்புமணி,  மின் மிகை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் வெறும் 800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யும் என்.எல்.சி தேவையா என்றும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிக்க : 7 வது நாளாக முடங்கியது நாடாளுமன்ற அவைகள்...!மத்திய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

மேலும், விவசாயிகளை வஞ்சித்து விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் என்.எல்.சி நிறுவனம் பணிகளை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்தால், கடலூர் மாவட்டம் முழுவதும் பாமக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்த அன்புமணி, மாவட்டமே ஸ்தம்பிக்கும் என்றும் ஆவேசமாக கூறினார். 

இதையடுத்து ஆவேசமாக போராடிய பாமகவினரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். முதலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவலர்கள் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது காவல்துறையினரின் வாகனங்கள் மீது கற்களை வீசியும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், காவல் துறை வாகனத்தின் முன்பு படுத்தும் பாமகவினர் தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்த பாமகவினர் மீது, காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சு அடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்,