வலுவிழந்தது ஆசானி புயல்.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வலுவிழந்தது ஆசானி புயல்.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி”  புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.

இது பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து,  ஆந்திரபிரதேசம்- மசூலிப்பட்டினத்திற்கு மேற்கே நிலவியது.

இந்தநிலையில் தாழ்வு மண்டலம் மேலும்  வலுவிழந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக விலுவிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன்  மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளை வரை அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.