குடிநீர் கேட்டு காங்கிரஸ் எம்எல்ஏவை முற்றுகையிட்ட பெண்கள்..!

குடிநீர் கேட்டு காங்கிரஸ்  எம்எல்ஏவை முற்றுகையிட்ட பெண்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் காங்கிரஸ் எம்எல்ஏவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் ஊராட்சிக்குட்பட்ட மௌத்தம்பேடு கிராமத்தில் இன்று அங்கன்வாடி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து அங்கன்வாடி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்காக வந்த காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகரை முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடிநீர், சாலை, நியாயவிலை கடை, பேருந்து வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் தங்களது கிராமத்தில் இல்லை என தெரிவித்தனர்.

தங்களது கிராமத்தில் நியாயவிலை கடை இல்லாததால் 3கிமீ. தூரம் நடந்து சென்று நெய்தவாயல் நியாயவிலை கடைக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் ஒருநாள் மட்டுமே நியாயவிலை கடையில் பொருட்களை வழங்குவதாகவும், அந்த நாளில் சென்றால் மட்டுமே பொருட்களை வாங்க முடிவதாகவும், பிற நாட்களில் சென்றால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் மீஞ்சூர் செல்ல வேண்டிய நிலையில் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுவதாக தெரிவித்தனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தராதது ஏன் எனவும் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து , கிராம மக்களை சமாதானம் செய்த எம்எல்ஏ துரை.சந்திரசேகர் முதற்கட்டமாக தம்மிடம் அளித்த கோரிக்கையின் பேரில் பாழடைந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கு பதிலாக புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கி தற்போது அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்துள்ளதாகவும், தற்போது கூறியுள்ள கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க   |  கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் தமிழ் எழுத்துக்கள் அழிப்பு!