இன்று தொடங்குகிறது சட்டசபை கூட்டத்தொடர் :  3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்ப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தொடங்கும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இன்று தொடங்குகிறது சட்டசபை கூட்டத்தொடர் :  3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்ப்பு

தமிழக சட்டசபை கூட்டம் ஆளுனர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள 3-வது மாடியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுனர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். இதில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பின்னர் சபாநாயகர் அப்பாவுவின் அறையில் அவரது தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற கட்சியின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்வார்கள். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்னென்ன அலுவல்களை மேற்கொள்வது என்பது பற்றி அதில் முடிவு செய்யப்படும்.

இந்த கூட்டத்தொடர் அனேகமாக 3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி பதிலுடன் விவாதங்களும் இடம் பெறும். தி.மு.க. ஆட்சியில் இதுவரை செய்துள்ள சாதனைகள், திட்டங்களை விளக்கி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். 

இதேபோல் எதிர்க்கட்சியினர் இப்போதைய ஆட்சியில் உள்ள குறைபாடுகளை எடுத்து பேசுவார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முக்கியமான வாக்குறுதிகளை இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்விக்கணை தொடுப்பார்கள். இதனால் சட்டசபையில் விவாதம் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இறுதிநாள் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசுவார்.