இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்.. நாங்களே வட்டிக்கு கடன் வாங்கி கடலுக்கு செல்கிறோம் - மீனவர்கள் கவலை!!

இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்.. நாங்களே வட்டிக்கு கடன் வாங்கி கடலுக்கு செல்கிறோம் - மீனவர்கள் கவலை!!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

26 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், மதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மகேந்திரன், சத்தியராஜ், மதன், வசந்த், மெல்லின் ஆகிய 5 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், மீனவர்களை கடுமையாக தாக்கிய இலங்கை படற்படையினர் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் அரிசி, காய்கறிகளையும் பறித்துச் சென்றுள்ளனர். அந்த படகையும் அவர்கள் சிறைப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே வட்டிக்கு கடன் பெற்று கடலுக்கு செல்லும் தாங்கள், இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகளால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள், மத்திய - மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.