சாலையில் தேங்கிக் கிடந்த மண்ணை, அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்...

தூத்துக்குடியில் சாலையில் தேங்கிக் கிடந்த மண்ணை, அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரிடம், தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் தேங்கிக் கிடந்த மண்ணை, அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில், மழையின் காரணமாக சிமெண்ட் சாலைகளில் அதிகளவிலான மண் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மண்ணை அகற்றும் பணியை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சாலையில் இருந்து அகற்றப்பட்ட மண்ணை, சாலையின் அருகே உள்ள தங்களது இடத்தில் ஒதுக்கக்கூடாது என்று, அதே கிராமத்தைச் சேர்ந்த கருங்கதுரை மற்றும் அவரது சகோதரர் செந்தில் குமார் ஆகியோர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் போஸ் உடன் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் போஸ், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, தந்தை தாக்கப்பட்டதை அறிந்த போஸின் மகன், கார்த்திக்ராஜா, செந்தில்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செந்தில்குமார் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கருங்கதுரையை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ததோடு, செந்தில்குமாரை தாக்கிய கார்த்திக்ராஜையும் கைது செய்தனர். மக்கள் நலனுக்காக மண்ணை அகற்றிய ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.