கனிம வளங்கள் கொள்ளையை தடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்!

கனிம வளங்கள் கொள்ளையை தடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்!

கன்னியாகுமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தி செல்லும் லாரிகளை நள்ளிரவில் தடுத்து நிறுத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் அடியாட்கள்.

தமிழகத்தில், குமரி மாவட்டம் வழியாக, குமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளை  உடைத்து, கேரளாவுக்கு தினம் தோறும் நூற்று கணக்கான டாரெஸ் லாரிகளில், கனிம வளங்களை சட்ட விரோதமாக ஏற்றி செல்கின்றனர். பெரும்பாலான லாரிகள் பாடி கட்டமைப்புகளை மாற்றி, உயரத்தை அதிகப்படுத்தி, அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து அதிக அளவில் கற்கள், ஜெல்லி, பாறை பொடி போன்ற கனிம வளங்களை ஏற்றி செல்கின்றன. 

இதனால் தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள் அழிந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இந்த கடத்தலுக்கு ஆளும் கட்சியும் காவல்துறையும் உடந்தையாக இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், ஒரு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது வருகின்றனர். ஆனால் இதையும் மீறி ஆயிரக்கணக்கான லாரிகளில் தினம் தோறும் கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிரது. 

இந்நிலையில், குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே சிராயன் குழி, உண்ணாமலைக்கடை பகுதிகளில்  இளைஞர்கள் ஒன்று கூடி கேரளாவுக்கு சுரங்க கனிமங்களை எடுத்துச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதில், ஆத்திரமடைந்த லாரி ஓட்டுனர்கள் மற்றும் அவர்களுடன் வந்த அடியாட்கள், தடுத்து நிறுத்திய இளைஞர்களை தாக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த  மார்த்தாண்டம் காவலர்கள், இளைஞர்களையும், லாரி ஓட்டுனர்களையும் மற்றும் அடியாட்களையும் பிரித்து வைத்து, பின்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சட்ட விரோதமாக  கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்தி செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்த காவல்துறை முன் வராத நிலையில், இளைஞர்களே  களத்தில் இறங்கி, கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.