ஏ.டி.எம்.ஐ உடைத்து கொள்ளை முயற்சி... ஆந்திர நபரை பிடித்து விசாரணை...

விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சி செய்ததில் ஆந்திராவைச் சேர்ந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏ.டி.எம்.ஐ உடைத்து கொள்ளை முயற்சி... ஆந்திர நபரை பிடித்து விசாரணை...

விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலை சிந்தாமணி பகுதியில் இயங்கி வருகிறது எஸ்பிஐ வங்கி, இந்த வங்கியின் அருகில் இந்த வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திராவைச் சேர்ந்த மர்ம நபர் அந்தப் பகுதியில் இயங்கிவந்த ஏடிஎம்மில் உள்ளே புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்து வந்துள்ளார். ஆள் நடமாட்டம் அதிகமுள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால் அந்த பகுதி வாசி இதனை நோட்டமிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முற்பட்ட நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடம் இருந்து 4 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினரின் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே முழுமையான விசாரணை நடைபெற்றால் தான் மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது பணம் எடுக்க வந்தாரா என்றும் இவருடன் எத்தனை நபர்கள் வந்தார்கள் என முழுமையான விபரம் தெரியவரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற ஏடிஎம்மில் மூன்றரை லட்சம் பணம் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக காவல்துறையினர் விரைந்து செயல்பட்டதால் மூன்றரை லட்சம் பணம் கொள்ளை போவது தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.