பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பொது தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை...

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்களின்றி ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்றது. இருந்த போதிலும், ஒரு சில பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கோவில் வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து சென்றனர்.

இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் பக்தர்களின்றி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், சிங்காரவேலர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பழ சாறுகள், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கோவையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி  கோவில், பேருர் பட்டீஸ்வரர் கோவில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி பாலசுப்பிரமணியர் ஆலயத்திலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நடைபெறும் காவடி ஊர்வலம், தேர் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, ஆகம விதிப்படியிலான பூஜைகள் மட்டும் நடைபெற்றது.

இதேபோல், திருவாரூர் கீழவீதி பழனியாண்டவர் திருக்கோயிலிலும் பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை மற்றும் தீபாராதணை நடைபெற்றது. கொரானா பரவல்  காரணமாக ஆலயத்திற்குள் பக்தர்கள் செல்ல தடை உள்ளதால் ஆலயத்தின் வாசலில் நின்று ஏராளமான பக்தர்கள் பழனியாண்டவரை தரிசனம் செய்தனர்.