பிறக்கிறது ஆவணி மாதம்...! பூக்களின் விலை அதிகரிப்பு..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த தோவாளை மலர் சந்தையில் ஆவணி மாதம் பிறப்பதை ஒட்டி பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கேரள வியாபாரிகள் குவிந்துள்ளதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.

பிறக்கிறது ஆவணி மாதம்...! பூக்களின் விலை அதிகரிப்பு..!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா மாநிலத்திலும் புகழ் பெற்றது. இங்கு ராயக்கோட்டை, ஓசூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் பெங்களூர் என வெளியூர்களில் இருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தினந்தோறும் பூக்கள் வரத்து இருக்கும். 

மேலும் இந்த பகுதியில் இருந்து கேரள மாநிலம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் பூக்கள் மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் அம்மன் கோவில்களுக்கு சிறப்பு வாய்ந்த நாளான இன்று, ஆடி மாதம் கடைசி செவ்வாய் கிழமை என்பதாலும், மேலும் நாளை ஆவணி மாதம் பிறப்பதையொட்டியும் தோவாளை மலர் சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 30 டன் பூக்கள் வந்துள்ளது. 

அதோடு பொதுமக்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதாலும், கேரளா மக்கள் ஆவனி மாத பிறப்பை மிக சிறப்பாக கொண்டாடுவதாலும் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று கிலோ ரூ.350 க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ.700 க்கும், பிச்சிபூ ரூ.350 ல் இருந்து ரூ.750 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

சில்லறை விற்பனையில் பிச்சி, மல்லிகை பூக்கள் ரூ.900 க்கு விற்கப்படுகிறது. இதைப்போல் அரளி ரூ.250 க்கும், சம்பங்கி ரூ.200 க்கும், ரோஜா ரூ.150 க்கும், தாமரை ஒன்று ரூ.10 எனவும்  அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் சுப மூகூர்த்தங்கள் பண்டிகை நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தோவாளை மலர் சந்தை பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.