வாசிப்பு பழக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..! மகேஷ் பொய்யாமொழி...!!

வாசிப்பு பழக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..! மகேஷ் பொய்யாமொழி...!!

சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினர்கள் வாசிப்பு பழக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

நிதிநிலை அறிக்கையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய கேள்வி நேரத்தின்போது சட்டப் பேரவையில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் நொச்சிப்பட்டியில் உள்ள ஊராட்சியில் கிளை நூலகம் அமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் வாசிப்பு பழக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் வாசிப்பு பழகத்தை அதிகரிப்பதற்காகத் தான் முதலமைச்சர் மக்கள் வாசிப்பு இயக்கத்தை ஆரம்பித்து பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசும்போது கிளை நூலகங்களை மேம்படுத்துவதற்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கும் நிலையில், உறுப்பினர்களும் தொகுதியில் வாசிப்பு பழக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் கிளை நூலகங்களை மேம்படுத்த 600 புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.