"தமிழ்நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது" செல்வபெருந்தகை குற்றச்சாட்டு!

"தமிழ்நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது" செல்வபெருந்தகை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளை தூண்டிவிட்டு பிரிவினை வாத பிரச்சனையை ஏற்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று பா ஜ கவினர் துடிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியனின் நிறுவனத் தலைவர் மறைந்த  நஞ்சப்பனுடைய 73 வது  பிறந்தநாளை முன்னிட்டு அமைப்புசாரா தொழிலாளர் வாழ்வுரிமை கருத்தரங்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது

தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியனின் மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொழிலாளர் யூனியனுடைய புதிய இணையதளத்தை துவக்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 44 தொழிலாளர் நல சட்டங்களை உருவாக்கினர். இதை தற்போது ‌4 சட்ட தொகுப்புகளாக குறைத்து ‌உள்ளனர். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது இதற்கும் அதிகமான தொழிலாளர் நல சட்டங்களை கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக அரசு ராகுல் காந்தி செய்த அரசியலை காப்பி அடித்து பாதயாத்திரை செய்ய முயல்கின்றனர். ஏற்கனவே அண்ணாமலை 3 முறை  தனது நடைபயனத்தை அறிவித்து தள்ளி வைத்து இருக்கிறார். இந்த முறையாவது நடத்துவாரா என்று தெரியவில்லை. அண்ணாமலை தன் நடைபயணத்தின் மூலம் என்ன சொல்ல போகிறார். அதானி அம்பானிக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லப் போகிறாரா அல்லது  2014 வரை காங்கிரஸ் கட்டி காத்த பெறும் பொது நிறுவனங்களை  விற்று அம்பானிக்கும் அதானிக்கும் கொடுத்து வருகிறார்கள் இதை மக்களிடம் சொல்ல போகிறாரா என்று விமர்சித்துள்ளார்.

ஜூலை பதினொன்றாம் தேதி நடைபெற இருக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க கூடாது என்ற அண்ணாமலை கருத்திருக்கு பதில் அளித்த அவர், பாசிச பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று ஒருமித்த கருத்தோடு நடைபெறுகின்ற கூட்டம் இதைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன சம்பந்தம் உள்ளது? என கேள்வி எழுப்பினார். 

மேலும் பாஜகவினர், தமிழ்நாட்டில் மதவாத சக்திகளை தூண்டிவிட்டு பிரிவினை வாத பிரச்சனையை ஏற்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து, சனாதனத்தில் தீண்டாமை இல்லை என்று ஆளுநரின் கருத்திற்கு பதில் அளித்த அவர், சனாதானத்தில் தான் தீண்டாமை தொடங்கியது என்றும் ஆளுநருக்கு விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை இல்லை பழமை வாதத்தின் மீது தான் நம்பிக்கை உள்ளது என விமர்சித்தார்.

எல்லோரையும் அடக்கி ஒடுக்கி ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற பாசிசத்தின் அடிப்படையில் ஹிட்லரின் ஆட்சியை இந்தியாவில் நடத்திக் கொண்டிருக்கின்ற கட்சி பாஜக என்று விமர்சித்த அவர் "அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஆளுநர் தலையிட்டது சரி" என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகேவாசன் தெரிவித்திருப்பது சந்தர்ப்பவாதி போல தெரிவதாக கூறியுள்ளார்.

இதையும் படிக்க:செவிலியர்களின் அலட்சியத்தால் கையை இழந்த பச்சிளம் குழந்தை!