" திமுகவை களங்கப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது பா.ஜ.க" - மா.சுப்பிரமணியன்.

" திமுகவை களங்கப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது பா.ஜ.க" -  மா.சுப்பிரமணியன்.

திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் எந்த விதமான விதிமுறைகளும் பின்பற்றப்பட வில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றார். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று சொன்ன பிறகும், செந்தில் பாலாஜிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் அமலாக்கத்துறை டார்ச்சர் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை விசாரணை என்ற பெயரில் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டதாக மா.சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். 

மேலும், பா.ஜ.க.வின் கிளை அமைப்புகள் போன்று செயல்படும் வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மிரட்டப்படுவதாக மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு கூறினார். 2024 மக்களவைத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதற்றத்தில் உள்ள பா.ஜ.க., அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளதாக அவர் விமர்சித்தார். 

மேலும், கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வெற்றிக்கு தடையாக இருக்கும் செந்தில் பாலாஜியை முடக்க அமலாக்கத்துறையை ஏவி மத்திய அரசு  பழிவாங்குவதாக  குற்றம்சாட்டினார்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தில்லுமுல்லுகளை செந்தில் பாலாஜி அம்பலபடுத்தியதை மா.சுப்பிரமணியன் சுட்டிகாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜக.வின் தோல்விகளுக்கு காரணமாக உள்ள செந்தில் பாலாஜியை பழி வாங்க மத்திய அரசு துடிப்பதாக தெரிவித்தார். தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்தி பா.ஜ.க. அரசு ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் அப்போது விமர்சித்தார். 

இதனையடுத்து, செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை நடவடிக்கைகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாக விமர்சித்த மா.சுப்பிரமணியன், தனது ஆட்சிக் காலத்தில் டெண்டர் ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு செந்தில் பாலாஜியை பதவி விலகச் சொல்ல எந்த தகுதியும் இல்லை என்றார். 

 இதையும் படிக்க     | அத்தியாவசிய தேவைக்காக ஆபத்தான பயணம்!