”சினிமாகாரங்கள விட்டுறுங்க நாட்ல எவ்வோளோ பிரச்னை இருக்கு” பாமகவுக்கும் சேர்த்து அட்வைஸ் செய்த அண்ணாமலை...

தமிழக பாஜகவினர் திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களைக்  தவிர்க்க வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

”சினிமாகாரங்கள விட்டுறுங்க நாட்ல எவ்வோளோ பிரச்னை இருக்கு” பாமகவுக்கும் சேர்த்து அட்வைஸ் செய்த அண்ணாமலை...

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் வரவேற்பை பெற்ற நிலையில், பாமக மற்றும் வன்னியர் அமைப்பினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஜெய்பீம்முக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.

அண்மையில் சிம்பு படத்தில் மாநாடு படம் வெளியானது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், வெளியான இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார். அதோடு, அமெரிக்காவில் குண்டு வீசினால் தீவிரவாதி, இந்தியா என்றால் முஸ்லீம் தீவிரவாதி. தீவிரவாதிகளுக்கு ஏது சாதி மதம் என்ற வகையில் வசனம் வருகிறது. கடைசி காட்சியில் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருக்கும் பெயர் பலகை இடம்பெற்றுள்ளது.
 
இந்த சூழலில், பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநாடு படம் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது. காவல்துறையினரை இழிவுபடுத்தும் வகையில் படக் காட்சிகள் உள்ளன. தீவிரவாதிகளை உருவாக்கக் கூடியவர்கள் போல் காவல்துறையினரை காட்டுகின்றனர். . கோவைக் குண்டு வெடிப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது. வன்முறையைத் தூண்டும் விதமாகக் காட்சிகள் அமைந்துள்ளன. முஸ்லீம்களை தீவிரவாதிகளாக போலீசார் காட்டுகின்றனர், அதனைத் தடுக்க வந்திருக்கிறேன் என்று சிம்பு சொல்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படவேண்டும். மாநாடு பட விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும். இப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநாடு படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் வீடு முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திரைப்படத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களைக் கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பாகக் கருத்துகள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாஜக நம்முடைய கண்டனங்களையும் கடுமையாகப் பதிவும் செய்திருக்கிறது.

திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சி சகோதர சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். கட்சியில் முக்கியப்பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காகப் பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும் பேசக்கூடாத நேரத்தில், பேசுவதைத் தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்!

நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள். எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களைக் கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஜெய்பீம் திரைப்படம் வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலையின் இந்த அறிக்கை பாமகவுக்கும் பொருந்தும் என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.