பாபர் மசூதி இடிப்பு நாள்: 1.20 லட்சம் போலீசார்...தமிழகம் முழுக்க பலத்த பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிப்பு நாள்:  1.20 லட்சம் போலீசார்...தமிழகம் முழுக்க பலத்த பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஆண்டுதோறும்  டிசம்பர் 6 ஆம் தேதி அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, நாளை டிசம்பர் 6 ஆம் தேதி என்பதால்  தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் எட்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. அத்துடன் ரயில் நிலையங்கள், விமான நிலையம், முக்கிய பேருந்து நிலையங்கள்,  வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை 4350க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதி வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மாணவர்களுக்கு மத்தியில் அரசியல் பேசும் ஆளுநர்...!விமர்சித்த அமைச்சர்!!

இதேபோல,திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பயணிகளின் உடைமைகள், ரயில் தண்டவாளங்கள், நடைமேடைகள் ஆகியவற்றில் சோதனை செய்தனர். 

நெல்லையில்  இருப்புப் பாதை காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ரயில்வே தண்டவாளம், ரயில் இன்ஜின் மற்றும் இரயில் பெட்டிகள் ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பார்சல் சர்வீஸ் அலுவலகம், வாகன நிறுத்துமிடங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கும் இடங்களில் சோதனை நடைபெற்றது. 

அதேபோன்று கோவை மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மாநகரில் 3 ஆயிரம் போலீசாரும் புறநகரில் ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சேலம், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுக்க ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.