மாலைமுரசு செய்தி எதிரொலி... விவசாயியிடம் டிராக்டரை ஒப்படைத்த வங்கி நிர்வாகம்...

மாலைமுரசு செய்தி எதிரொலியால், பரமக்குடியில் விவசாயிக்கு தெரியாமல் எடுத்துச் சென்ற டிராக்டரை, வங்கி நிர்வாகம் திரும்ப ஒப்படைத்துள்ளது. 

மாலைமுரசு செய்தி எதிரொலி... விவசாயியிடம் டிராக்டரை ஒப்படைத்த வங்கி நிர்வாகம்...
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள காக்கனேந்தலைச் சேர்ந்த ராமாயி என்பவர், கடந்த 2016ம் ஆண்டு பரமக்குடியில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கிய நிலையில் கடன் தொகையினை முழுமையாக செலுத்தியுள்ளார். மீண்டும் அதே வங்கியில் டிராக்டர் மீது கடன் வாங்கிய அவரால், கொரோனா ஊரடங்கு காரணமாக 3வது தவணை செலுத்த முடியாத நிலையில், வங்கி நிர்வாகம் தவணைத் தொகைக்கு வட்டி போட்டு செலுத்த சொல்லியுள்ளது. அதனையும் அவர் செலுத்திய நிலையில், உடனடியாக கடன் தொகை முழுவதையும் செலுத்துமாறு மிரட்டிய வங்கி நிர்வாகம், டிராக்டர் மற்றும் டிரெய்லரை விவசாயிக்குத் தெரியாமலேயே கள்ளச்சாவி போட்டு எடுத்துச் சென்றுள்ளது.
 
வேறு வழியின்றி கடன் தொகை முழுவதையும் செலுத்திய விவசாயி, டிராக்டரை திரும்ப கேட்டபோது, அதனை விற்பனை செய்து விட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் செய்வதறியாது நின்ற விவசாயி குறித்து, ஜூலை 15 ஆம் தேதி மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வங்கி நிர்வாகம் டிராக்டரை ராமாயியிடம் ஒப்படைத்தது. டிராக்டருக்கு தீபாராதனை செய்து மகிழ்ந்த ராமாயி, டிராக்டர் திரும்பக் கிடைப்பதற்கு உதவியாக இருந்த மாலை முரசு தொலைக்காட்சிக்கு மற்றும் அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.