காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்...அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்...அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சியினர் அவரின் திருவுருவச் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜரின் 121 பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகரில் உள்ள காமராஜரின் சிலைக்கு மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக சுலோச்சனா தெருவில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிக்க : ”1997 ல் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கி புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி” முதலமைச்சர் பெருமிதம்!

இதேபோல், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடியில் வஉசி மார்க்கெட் முன்பு நிறுவப்பட்டுள்ள காமராஜரின் சிலைக்கு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோன்று, திருவண்ணாமலையில் அமைந்துள்ள பெருந்தலைவரின் சிலைக்கு சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், காமராஜரின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.