சென்னை உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கிய கோடைமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் கோடைமழை வெளுத்து வாங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கிய கோடைமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் அசானி புயல் வங்க கடலில் உருவாகி கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த தாம்பரம், பல்லாவரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெளுத்து வாங்கிய கனமழையால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோல், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. திடீரென பெய்த மழையால், பூந்தமல்லி, குமணன்சாவடி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஆலப்பாக்கம், மாமண்டூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பெய்த கன மழையால் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட ராகி பயிர்கள் சேதமடைந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.