மாணவியின் பெற்றோர் மீது சிபிசிஐடி குற்றச்சாட்டு...உத்தரவிட்ட நீதிமன்றம்...!

மாணவியின் பெற்றோர் மீது சிபிசிஐடி குற்றச்சாட்டு...உத்தரவிட்ட நீதிமன்றம்...!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாணவி மரண வழக்கு:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி தாளாளார் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.  

சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்:

இதனிடையே, வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்க: அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் இருந்து நீக்கமா? புதிய அழைப்பு யாருக்கு?
  
இதன்படி, கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாணவி மரணம் தொடர்பாக 53 யூடியூப் இணைப்புகள் முடக்கப்பட்டதாகவும், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

இன்று  விசாரணை:

இதனையடுத்து, வழக்கின் புலன் விசாரணை குறித்த இறுதி அறிக்கையை செப்டம்பர் 27-ஆம் தேதி தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, மாணவி மரண வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என சிபிசிஐடி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிபிசிஐடிக்கு உத்தரவு:

இதனையடுத்து, மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு அறிவுறுத்திய உயர் நீதிமன்றம், மாணவி மரண வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை அக்டோபர் 10-ஆம் தேதி தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.