"விருப்பம் இல்லை எனில் கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறலாம்" சிவி சண்முகம் காட்டம்!

"விருப்பம் இல்லை எனில் கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறலாம்" சிவி சண்முகம் காட்டம்!

விருப்பம் இல்லை எனில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறலாம் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் காட்டத்துடன் கூறியுள்ளார். 

கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பா.ஜ.க. இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மோசமான ஊழல் முதலமைச்சர் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம், ஆளுமை மிக்க தலைவர் ஜெயலலிதா பற்றி பேச முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தகுதியில்லை என்றும், காவல் நிலையத்தில் மாமூல் வாங்கி கொண்டிருந்தவர் தான் அண்ணாமலை என்றும் காட்டத்துடன் கூறினார்.  அத்துடன், அண்ணாமலை திமுகவின் ஏஜென்ட் என்று விமர்சித்த சி.வி. சண்முகம், விருப்பம் இல்லை எனில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறலாம் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். 

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்று கூறினார். 

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!