வரி செலுத்துவோரைக் கண்காணிக்க கால் சென்டர்... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...

வரி செலுத்துவோரைக் கண்காணிக்கவும், தாமதமாக வரி செலுத்தப்படுவதைத் தவிர்க்கவும் அழைப்பு மையம் உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வரி செலுத்துவோரைக் கண்காணிக்க கால் சென்டர்... அரசாணை  வெளியிட்டது தமிழக அரசு...

தமிழகத்தில் தற்போது பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் மாதாமாதம் அறிக்கை தாக்கல் செய்வதை கண்காணிக்கவும், தாமதமாக அறிக்கை தாக்கல் செய்வதை தவிர்க்கவும் ஏதுவாக, வரி செலுத்துவோரை தொடர்ந்து வலியுறுத்த புதிய அழைப்பு மையங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் வணிகவரித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.  

அதனை செயல்படுத்தும் விதமாக, வணிகவரித்துறையின் கீழ் வரும் தனிநபர்கள், நிறுவனங்கள் முறையாக வரி செலுத்துகின்றனரா என்பதை கண்காணிக்கவும், தாமதமாக வரி செலுத்தப்படுவதைத் தவிர்க்கவும் புதிய அழைப்பு மையங்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

மேலும், வரி செலுத்துவோரை நேரடியாக தொடர்பு கொண்டு வரியை செலுத்த ஏதுவாக அழைப்பு மையங்கள் ஏற்படுத்த முடிவு செய்து 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 40 பணியாளர்களைக் கொண்ட அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.