போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்ட 959 ஆவணங்கள் ரத்து!

போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்ட 959 ஆவணங்கள் ரத்து!

போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்ட 10,555 மனுக்கள் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது இதில் 959 ஆவணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறை சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கூடிய சங்க நிர்வாகிகள் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பத்திர பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி,  போலி ஆவணங்களை இரத்து செய்ய புதிய சட்டம் இயற்றப்பட்டு மாநிலம் முழுவதும் 10,555 மனுக்கள் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 959 ஆவணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயற்றப்பட்ட போலி ஆவணங்களை இரத்து செய்யும் பதிவு சட்டம் பிரிவு 77Aயை பின்பற்றி மற்ற மாநிலங்களும் இச்சட்டத்தை இயற்றும் முனைப்பில் உள்ளன.

பதிவுத்துறையில் மக்களின் நலனுக்காக செங்கல்பட்டு மற்றும் இராமநாதபுரம் ஆகிய இரண்டு புதிய மண்டலங்கள் மற்றும் ஆறு பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் 2021-22 ஆண்டில் 23 அலுவலகங்களுக்கும், 2022-23 ஆண்டில் 15 அலுவலகங்களுக்கும் ஆக மொத்தம் 38 அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டத்தை அறவே ஒழித்திட ஆதார் தரவுடன் விரல்ரேகை மற்றும் கருவிழி படலம் சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரிசையாக காத்திராமல் பத்திரப்பதிவு மேற்கொள்ள முன்னுரிமை வழங்கப்படுகிறது. உரிமை ஆவணம் ஒப்படைப்பு ஆவணம், ரசீது ஆவணம், குடியிருப்புக்கான 5 வருடங்களுக்கு உட்பட்ட குத்தகை ஆவணம் ஆகியவற்றை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் வங்கி/வீட்டில் இருந்த படியே பதிவு மேற்கொள்ள இணையவழி பதிவு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மையக்கணினியில் ஆவணங்களை திருத்தம் செய்ய இயலாத வகையில் நம்பிக்கை இணையம் என்ற பிளாக் செயின் (Black Chain) தொழில்நுட்ப வசதி அமைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க:கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் தமிழ் எழுத்துக்கள் அழிப்பு!