5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்கள் மழை பெய்யக் கூடும் என எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் எனவும், தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.