தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு...

தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு...

தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், இதர வட மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.24ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.