6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 12-ந்தேதி வரை தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள் அறிக்கையில், இன்று அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.