கலைமாமணி விருதாளர்களுக்கு காசோலை வழங்கினார் முதலமைச்சர்...!

கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கிழிக்கான காசோலை மற்றும் கிராமியக் கலைஞர்களுக்கு நிதி உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.  

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில், வறிய நிலையில் உள்ள கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கலைமாமணி விருதாளர்கள் 10 பேருக்கு, பொற்கிழிக்கான, தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலைகளை வழங்கினார். அத்துடன், 500 கிராமியக் கலைஞர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார். 

இதையும் படிக்க : பணத்துக்காக முதலாளியை கொலை செய்த ஊழியர்...!

இதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறை சார்பில், 56.95 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அத்துடன் நாகையில் மீன்வள பொறியியல் கல்லூரியில், 14.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மாணவர் விடுதிக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.