சென்னை மாநகராட்சி 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ப்ரியா ராஜன் தாக்கல் செய்தார்...!

சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ப்ரியா ராஜன் தாக்கல் செய்த நிலையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை மாநகராட்சி 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ப்ரியா ராஜன்  தாக்கல் செய்தார்...!

கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் சிறப்பு அதிகாரியாக மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டு மறைமுகமாகவே பட்ஜெட் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் நடப்பாண்டு தேர்தல் நடைபெற்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ள நிலையில், மாநகராட்சிக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேயர் பிரியா ராஜன் தலைமையில் வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவர் சர்பஜெயதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள், இப்பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு விவாதிக்கலாம் என பிரியா ராஜன் கூறியதால் அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் 145வது வார்டு உறுப்பினர் சத்யநாதன், சொத்து வரி உயர்வால் சாமானிய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரி உயர்வை வாபஸ் பெறும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.