அரசியலுக்கு வரும் சிதம்பரம் மருமகள்... காங்கிரசில் உருவாகும் புதுகோஷ்டி...

முன்னாள் மத்திய அமைச்சரின் மருமகளும், சிவகங்கை பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி அரசியலில் இறங்கியுள்ளார்.

அரசியலுக்கு வரும் சிதம்பரம் மருமகள்... காங்கிரசில் உருவாகும் புதுகோஷ்டி...

காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை தொண்டர்களைவிட தலைவர்களே அதிகம் என்று காமெடியாக சொல்வதுண்டு. அதே போன்று கோஷ்டிப்பூசல்களுக்கு பஞ்சமே இல்லாத கட்சி காங்கிரஸ் கட்சி.  ஒவ்வொரு தலைவருக்கும் தனித்தனி ஆதரவாளர் கூட்டம் உண்டு. இந்த கோஷ்டிகள் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு தேசிய தலைவர்கள் வரும்போதெல்லாம் வருவது வழக்கம். அப்போது நடக்கும் நாற்காலி சண்டைகளுக்கு பஞ்சமே இருக்காது. சில நேரம் கைகலப்பு வரை போய்விடும். காங்கிரசிலேயே கோஷ்டிகள் அதிகம். அதிலும் மற்ற மாநில காங்கிரஸைவிட தமிழக காங்கிரசில்தான் கோஷ்டிகள் அதிகம்.

ஏறக்குறைய 10 கோஷ்டிகளுக்கும் மேல் உள்ள நிலையில், மகளிரணியிலும் அதற்கு பஞ்சமில்லாமல் விஜயதரணி, ஹசீனா சையது, ஜான்சிராணி என ஏழெட்டு கோஷ்டிகள் இருக்கும் நிலையில், தற்போது ஸ்ரீநிதி தலைமையில் புது கோஷ்டி உருவாகி வருகிறது.

டாக்ரான ஸ்ரீநிதி தனது கணவரின் தொகுதியான சிவகங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, சென்னையிலிருந்து மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் ஸ்ரீநிதிக்கு மகளிர் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிவகங்கை தொகுதியில் நேற்று முன்தினம் மகளிரை சந்தித்துப்பேசிய ஸ்ரீநிதி, பெங்குடியில் நூறுநாள் வேலையில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்தார், அதைத்தொடர்ந்து சுயஉதவிக்குழு மகளிரையும் சந்தித்து பேசிய அவர், நேற்று மகளிர் காங்கிரசை சேர்ந்த செந்தாமரை மாமனார் மறைவுக்கு துக்கம் விசாரித்தார். அவரது திடீர் அரசியல் சுற்றுப்பயணத்தில் சர்ச்சைகளும், விமர்சனங்களும் ஏற்பட்டுள்ளது.

அரிமளம் ஒன்றியம், கடியாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டரின் இருக்கையில் ஸ்ரீநிதி அமர்ந்து, டாக்டர்களிடம் பேசிய புகைப்படம், சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே இருக்கும் கோஷ்டிகளை சமாளிக்கவே காங்கிரஸ் தலைமை திண்டாடி வரும் நிலையில், இப்போது ஸ்ரீநிதி காங்கிரசில் புதுவரவாக ஒரு கோஷ்டியை உருவாக்கி வருகிறார். இது எங்கு போய் முடியும் என்பது போகப் போகத்தான் தெரியும்.