கச்ச தீவு விவகாரம்; "உண்மைக்கு மாறாக முதலமைச்சர்" எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

கச்ச தீவு விவகாரம்; "உண்மைக்கு மாறாக முதலமைச்சர்" எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து விட்டு தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு மாறாக பேசி  வருவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். 

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், மாலை நான்கரை மணி அளவில் விழா மேடைக்கு வந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதலில் மாநாட்டிற்கான சிறப்பு மலரை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.madurai admk conference மதுரை அதிமுக மாநாடு சிறப்பு மலர் வெளியீடு; திமுக  அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள்!

பின்னர் விழாவில் சிறப்புரை ஆற்றிய எடப்பாடி பழனிச்சாமி, குடிமராமத்து பணிகள், புயல் சீற்றம், கொரோனா பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் என அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டார்.

மீத்தேன், ஈத்தேன் திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்டதாக குறிப்பிட்ட அவர், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் என்றார். ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமு.க அரசு கிடப்பில் போட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

ஏழை - எளிய மக்கள் பயன்பெரும் வகையில் 2 ஆயிரம் அம்மா கிளினிக்கள் தொடங்கப்பட்டதாக கூறிய அவர்,  ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியின் போது பல்வேறு துறைகளில் மத்திய அரசின் விருதுகளை தமிழ்நாடு பெற்றதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த திமுக அரசு, தற்போது நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கச்சத்தீவை மீட்போம் என உண்மைக்கு புறம்பாக பேசுவதாகவும் விமர்சித்தார். தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், நீட் நுழைவு தேர்வு விவகாரத்தில் திமுகவினர் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றி வருவதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சிக்கு வந்த உடன் நீட் ரத்துக்காக முதல் கையெழுத்திடுவேன் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது எனவும் வினவினார். தமிழ்நாடு அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மடைமாற்ற திமுக முயற்சித்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

திமுக ஊழல் அமைச்சர்கள் மீதான வழக்கை உச்சநீதிமன்றம் வரை சென்று நடத்துவோம் என அவர் கூறினார். தமிழ்நாட்டில் முறைகேடாக நடைபெறும் டாஸ்மாக் கடைகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். அதிமுகவில் உழைக்கும் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக கூட ஆகலாம் என்ற எடப்பாடி பழனிச்சாமி, மற்ற கட்சிகளில் அப்படி ஒரு நிலை இல்லை என்றார்.

இதையும் படிக்க:விளையாட்டு மைதானம் இல்லாத விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு!