முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கீழடி பயணம்... நாளை நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க திட்டம்...

திருப்புவனம் அருகே அகழாய்வு நடைபெறும் கீழடிக்கு செல்ல உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால தமிழர்களின் நாகரீகத்தை பார்வையிடுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கீழடி பயணம்... நாளை நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க திட்டம்...

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இந்த விழா 3 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.  இந்த ஆண்டு முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா நேற்று ஆன்மீக விழாவோடு, தொடங்கியது.

நாளை நடைபெறும் குருபூஜை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை செல்கிறார்.  அதன் பிறகு மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அகழாய்வு நடைபெறும் கீழடிக்கு சென்று அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால தமிழர்களின் நாகரீகத்தை பார்வையிடுகிறார். 

அதன்பின் மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலின், சிறிது நேர ஓய்வுக்கு பின் மதுரையில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறார். அதன்படி மதுரை நத்தம் சாலையில் பொதுப்பணித்துறையில் குடியிருப்பு வளாகத்தில் 100 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூலகம் அமையும் இடத்தை பார்வையிடுகிறார்.

நாளை காலை 7 மணிக்கு கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன்பின் பசும்பொன் புறப்பட்டு, அங்கு காலை 9 மணிக்கு முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை தொடர்ந்து, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கொரோனா விதிகளை பின்பற்றி வரவேற்பு கொடுக்க வேண்டும் என, தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.