தமிழ்நாட்டின் திராவிட மாடல் குறித்து முதலமைச்சர் சொன்னது என்ன?

தமிழ்நாட்டின் திராவிட மாடல் குறித்து முதலமைச்சர் சொன்னது என்ன?

தமிழ்நாட்டின் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் முகஸ்டாலின், திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், திராவிட மாடல் இந்தியாவின் வெற்றிச்சூத்திரமாக அமைந்துள்ளது என  கூறியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர், பல்வேறு நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், கடந்த ஓராண்டில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு செய்த நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டார். திருப்பத்தூரில் புதிய அரசு, கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுவதுக்கும் வழிகாட்டுவதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவை தவிர அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பதாகவும், மாநில சுயாட்சிக்கு வித்திட்டது தமிழ்நாடுதான் என்றும் பேசினார். மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடித் தேடி நிறைவேற்றி வருவதுதான் திமுக ஆட்சி எனக்கூறிய முதலமைச்சர், இந்தியாவில் 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு வித்திட்டது தமிழ்நாடு என்றும் குறிப்பிட்டார். 

இதைத்தொடர்ந்து வேலூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.