இன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்னுயிர் காப்போம் திட்டத்தை  தொடங்கி  வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த விபத்தை  குறைக்கவும்,  விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழக அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் விபத்தில் காயமடைபவர்களுக்கு முதல் 24 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

இதற்கென 609 மருத்துவமனைகளும் தேர்வு செய்யப்பட்டு, காயமடைபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு சார்பில் இலவச சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது காயமடைந்தவரை பொன்னான மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்ப்போருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 

இந்தநிலையில் இத்திட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விபத்தில் பெரும்பாலும் இளைஞர்களே உயிரிழப்பதாக கவலை தெரிவித்தார். இதற்கு அதிவேகமான வாகன பயணமே காரணம் எனவும் கூறினார். விபத்தில் காயமடைவோருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என கூறினார்.

அதுமட்டுமல்லாது தொடர்ந்து நிலையற்ற தன்மையில் அந்த காயமடைந்தவர் இருந்தால், அவருக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என கூறினார். விபத்தில் தமிழகத்தில் தான் அதிகம் பேர் உயிரிழப்பதாக குறிப்பிட்ட அவர், துரிதமான செயல்பாடுகள் இன்னுயிரை காக்கும் என்றும் தெரிவித்தார். முடிந்தவரை வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லவும், கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லவும் கேட்டுக்கொண்டார்.