9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

மத்திய அரசின் துறைமுக சட்டமுன்வடிவை எதிர்க்குமாறு 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்  

9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

குஜராத், மகாராஷ்ட்ரா, கோவா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், தற்போது நடைமுறையில் உள்ள துறைமுகங்கள் சட்டம் 1908ன் படி, சிறு துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 மத்திய அரசு தற்போது  வெளியிட்டுள்ள வரைவு சட்டமாக இயற்றப்பட்டால், சிறு துறைமுகங்களின் கட்டுப்பாடு மத்திய அரசின் கீழ் இயங்கும் எம்எஸ்டிசி அமைப்பின் கீழ் சென்று விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள நடைமுறையில் மாநில அரசின் கீழ் சிறு துறைமுகங்கள் சிறந்த வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்துள்ள அவர், இந்த புதிய சட்டம் நீண்ட நாட்களாக சிறு துறைமுகங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருந்து வரும் உரிமையை பறிப்பதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் மாநில அரசால் சிறு துறைமுகங்களின் மேல் எந்தவித அதிகாரத்தையும் செலுத்த இயலாமல் போய்விடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய சட்டம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதை தமிழக அரசு ஏற்கனவே மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் எடுத்துக் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 எனவே துறைமுகங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  ஜூன் 24ம் தேதி நடைபெறவுள்ள புதிய வரைவு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென அவர் கடிதத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.