பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்...

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை முன்பிருந்த படி மாற்றி அமைக்குமாறு, பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்...
இதுதொடர்பாக பிரதமருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை குறைக்கும் வகையில், உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, முன்பு இருந்தபடி,49:49:2 என்ற விகிதத்தில் பங்கினை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 
 
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகவும், தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால், காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். 
 
இந்த நிலையில், பயிர் கட்டண மானியத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை 49 விழுக்காட்டில் இருந்து பாசனப் பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயித்து இருப்பதால், 2016 - 17ஆம் ஆண்டில் 566 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசின் பங்கு, 2020 - 21ஆம் ஆண்டில் ஆயிரத்து 918 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். 
 
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரித்து வரும் நிலையில், இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்கு சவாலாகவும், கடினமாகவும் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.  மத்திய அரசின் இந்த நடவடிக்கை, இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கி இருப்பதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சாடியுள்ளார். 
 
எனவே பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பை குறைக்கும் வகையில் உயர்ந்த பட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மத்திய அரசு 49 விழுக்காடு என்ற அளவுக்கு தனது பங்களிப்பினை வழங்கும் வகையில், மாற்றி அமைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.