முதலீடுகளை ஈர்க்க துபாய் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!! என்னென்ன பிளான்!!

தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுமுறை பயணமாக சென்னையிலிருந்து துபாய் புறப்பட்டு சென்றார்..

முதலீடுகளை ஈர்க்க  துபாய் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!! என்னென்ன பிளான்!!

துபாயில்  192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி நடைபெறுகிறது. இதில், தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

இக்கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானத்தில் இன்று மாலை துபாய் புறப்பட்டார். விமான நிலையத்தில் அவரை, அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. அப்துல்லா, எம். எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் சென்றனர். 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சருக்கு, அங்குள்ள தமிழர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

துபாய் சர்வதேச கண்காட்சியில் நாளை பங்கேற்கும் முதலமைச்சர், தமிழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைக்க உள்ளார். அப்போது, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுக்கவுள்ளார். 

மேலும், இந்த கண்காட்சியின்போது பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், வரும் 28-ந்தேதி அபுதாபியில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பவுள்ளார்.