ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை- பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பா ?

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, பள்ளிகள் திறப்பது தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை- பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பா ?

தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

ஆனாலும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், உயிரியல் பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு தடை, நீச்சல்குளங்கள், மதுபான பார்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட சிலவற்றை திறக்க தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

இதற்கிடையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுதினம் காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து வரும் 23ம் தேதி முதல் தமிழகத்தில், கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, பள்ளிகள் திறப்பது தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்க்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளை திறப்பது குறித்தும், 9 முதல் 12ம்- வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.