மதம் மாறிய பட்டியலினத்தவருக்கான தனித் தீர்மானம்...! முதலமைச்சருக்கு திருச்சபை தலைவர் நன்றி ...!!

மதம் மாறிய பட்டியலினத்தவருக்கான தனித் தீர்மானம்...!  முதலமைச்சருக்கு திருச்சபை தலைவர் நன்றி ...!!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பிஷப் தார்ப் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி ஒரு கோடியே 20 லட்சம் செலவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த  தஞ்சாவூர் மண்டல தென்னிந்திய திருச்சபை தலைவர் சந்திரசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், தலித் கிறிஸ்தவர்களின் 72ஆண்டு உரிமை மீட்பு போராட்டம் நடத்திய கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் அனைவருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்திடும் தமிழக அரசின் தனி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தென்னிந்திய திருச்சபை தஞ்சை திருமண்டலத்தின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், "72 ஆண்டுகளாக, கிருத்துவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்ற சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.இதை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியும் எந்த ஒரு பயனும் இல்லை. ஆதி திராவிடர்கள் இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சீக்கிய மதத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களை பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அரசு பட்டியல் இன மக்களுக்கு வழங்குகின்ற அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால் இந்து பட்டியல் இனத்தில் இருந்து முஸ்லிம் அல்லது கிருத்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களை பட்டியல் இன பிரிவில் இருந்து நீக்கி விடுகின்றனர். 

இதனால் பட்டியல் இன வகுப்பை சேர்ந்த மக்களுக்கு கிடைக்கின்ற எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை. இந்த கொள்கையை எதிர்த்து பலகட்ட போராட்டம் நடத்தி எந்த ஒரு பயனும் இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கும், கிருத்துவர்களுக்கும் பல எண்ணற்ற நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார். தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தையை மிஞ்சிய தனயன் என்பதை போல பல ஆண்டு கால போராட்டத்திற்கு பின் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்கள் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களை பெற இந்திய அரசியலமைப்பு சட்டம் 368 இல்  சட்ட திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசை வலியுறுத்தும் விதமாக, தமிழக அரசின் தனி தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும், தஞ்சாவூர் மண்டல தென்னிந்திய திருச்சபை சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்" என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், தென்னிந்திய திருச்சபை குருத்துவ செயலாளர் சுதர்சனன், இறை மக்கள் செயலாளர் ஸ்டான்லி, பொருளாளர் ராஜேந்திரன், மறை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கலைச்செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.