"மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும்" கடலோர காவல்படை அறிவுறுத்தல்!

"மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும்" கடலோர காவல்படை அறிவுறுத்தல்!

மீனவர்கள் கரைக்கு திரும்ப இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தலைமையகம்  அறிவுறுத்தியுள்ளது. 

தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியைக் கருத்தில் கொண்டு, இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஆந்திரா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் செயல்படும் மீனவர்களின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக துறைமுகத்திற்குத் திரும்ப அறிவுறுத்தத் தொடங்கியுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை 22 அக்டோபர் 2023 க்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரும், அடுத்த 3 நாட்களில் மேலும் தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல தலைமையகம், கடல் கொந்தளிப்பின் போது மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், உயிர்ச்சேதங்களைத் தடுக்கவும் ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பரப்பில் பல கப்பல்களை தயாராக நிறுத்தியுள்ளது. சென்னையில் இருந்து வரும் கடலோர காவல்படை விமானங்களும் ரேடியோ அலைவரிசையில் ஆழ்கடலில் இயங்கும் மீன்பிடி படகுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கி வருகின்றன. காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமடைவதற்குள் சிறிய படகுகள் மற்றும் படகுகள் பாதுகாப்பாக துறைமுகத்திற்கு திரும்பும் வகையில் மீனவ சமூகத்தினருக்கு முன்கூட்டியே அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நேரத்தில் ஆந்திரா மற்றும் தமிழக கடலோர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:'உபா' சட்டத்தில் கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ நிர்வாகிகளுக்கு ஜாமீன்!