கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு...முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபாடு!

கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு...முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபாடு!

கல்லறைத் திருநாளையொட்டி கிறிஸ்துவ மக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து கல்லறைகளில் பிரார்த்தனை செய்தனர். 

கல்லறை திருநாள்:

பொதுவாகவே, உயிரிழந்த முன்னோர்களின் ஆன்மாவுக்காக முன்னெடுத்த பிரார்த்தனைகளை தான் கல்லறைத் திருநாளாக இன்றும் கிறிஸ்துவ மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் கல்லறை திருநாளான இன்று அனைத்து இடங்களிலும் கிறிஸ்துவ மக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து கல்லறைகளில் பிரார்த்தனை செய்தனர். 

கல்லறைகளை சுத்தம் செய்து மலர் அலங்காரம்:

அதன்படி, திருச்சி மாவட்டம் மேலப்புதூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், கிறிஸ்துவர்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள கல்லறைத் தோட்டத்திலும், கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது. கல்லறைகளை சுத்தம் செய்து, அலங்கரித்து, இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கினர். 

இதையும் படிக்க: இனி ராஜராஜ சோழனின் பிறந்த நாளும் அரசு விழா தான்...!

அதேபோல், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பருகம்பட்டு, மாதம்பட்டு, சிறும மதுரை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கல்லறைகளிலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இறந்தவர்களின் கல்லறைகளில் மலர் தூவி அலங்கரித்து, மெழுகு வர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 

அதேபோன்று, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கல்லறைத் தோட்டத்தில், கல்லறைத் திருநாள் கடைபிடிக்கப்பட்டது. கிறிஸ்துவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயம் கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.