அரசின் உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா

தமிழக அரசின் உள் ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

அரசின் உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பம் கிராமத்தை சேர்ந்த  கூலி தொழிலாளியின் மகள் அனுஷா. இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்புவரை பயின்றார். இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவி அனுஷா, 273 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அத்துடன், தமிழக அரசின் 7 புள்ளி 5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம், தரவரிசைப் பட்டியலில் 259-வது இடத்தை பிடித்து,  விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில சேர்க்கைக்கான ஆணையை பெற்றார்.

இதனையடுத்து, மாணவி அனுஷாவிற்கு அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சமூக ஆர்வலர்கள், மாணவிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர். மாணவி ஸ்டெதஸ்கோப் கொண்டு,  ஆசிரியரின் இதய துடிப்பை பரிசோதிக்க, சக மாணவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். மாணவி அனுஷா அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.