தொடர் விடுமுறை.. சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!!

தொடர் விடுமுறையை அடுத்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால், உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் களைகட்டியுள்ளது.

தொடர் விடுமுறை.. சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!!

சித்திரைத் திருநாள், ஈஸ்டர் பண்டிகை, வார விடுமுறை நாட்கள் என தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால், நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.  உதகையில் காலைவேளையில் வெயில், மதியம் மழை என இருவேறு காலநிலையால் குளு, குளு சீதோசன காலநிலை நிலவுகிறது.

இதனால் உதகையில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதில் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பூங்காவில் உள்ள பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை, புல் மைதான பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கண்டுகளித்தனர். தொடர்ந்து பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் உதகை அரசு தாவரவியல் பூங்கா களைகட்டி காணப்படுகிறது.

இதேபோல், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல்லில்  ஞாயிறு விடுமுறையை யொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர். மேலும் சிலர்,  எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்து உற்சாகமடைந்தனர். பின்னர்  ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை கண்டும் ரசித்தனர்.

மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.