மழைநீர் வடிகால் ஒப்பந்ததார்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை...!

சென்னையில் முறையாக வடிகால் பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடிகால் பணிகளை சரியாக மேற்கொள்ளாத ஒப்பந்ததார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சிலர், வடிகாலில் வண்டல் வடிகட்டியை கட்டமைக்காமலும், சாலை சீரமைப்பு பணிகளை நிறைவு செய்யாமலும் விட்டுவிடுவதாக புகார் எழுகிறது. 

எனவே, மழை நீர் வடிகால் பணிகளுடன், வடிகட்டி கட்டமைத்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தரமாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பணிகள் நிறைவுபெற்ற பின் அங்குள்ள கட்டுமான கழிவுகள் மற்றும் சகதிகளை கட்டாயம் அகற்ற வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உரிமைத் தொகை; விடுபட்டவர்கள் விரைவில் சேர்க்கப்படுவர் - அமைச்சர் கே. என்.நேரு!

மேலும் பணிகள் அனைத்தையும் முடித்தால் மட்டுமே, ஒப்பந்த தொகை முழுமையாக விடுவிக்கப்படும். இல்லையெனில், தொகை நிறுத்தி வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பணிகளை வரும்  30-க்கும் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளாத 5 ஒப்பந்ததார்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.